கரூர்:கரூரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்திய மதுப் பிரியருக்கு, ஊழியர் ரசீது தர மறுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க நவம்பர் 29ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகளில், பீஓஎஸ் (point of sale) மெஷின் மூலம் கூகுள் பே (G-Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட செயலி மூலம் பணம் செலுத்தும் டிஜிட்டல் (Digital Payment Method) பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கும் 87 அரசு மதுபான கடைகளிலும் பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரசீதும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் வாங்கல் சாலையில் உள்ள பாலாம்மாள்புரம் கடை எண் - 5060-ல் மது வாங்கும் வாடிக்கையாளர்களைப் பணம் செலுத்தியதைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த டிச.16ஆம் தேதி மதுபான கடை ஊழியர்கள் அனைவரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த புகார் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே கடையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனை மேற்பார்வையாளர் ராஜ்கண்ணா என்ற மதுபான கடை ஊழியர், பணிக்கு வந்த நிலையில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திய மதுப்பியருக்கு ரசீது தர மறுத்தாகக் கூறப்படுகிறது.
தற்போது, அது தொடர்பான வீடியோவில், ஒரு குவாட்டர் ரூ.145க்கு பதிலாக ரூ.150 செலுத்திட வேண்டுமென மதுப்பிரியரை கட்டாயப்படுத்தியதாகவும், ஊழியர் பணத்தை செலுத்திய பிறகு அதற்கு ரசீத தர மறுத்ததும், அதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் கட்டாயம் தனக்கு ரசீது கொடுத்தால் தான் அந்த இடத்தில் இருந்து செல்வேன் என்று வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.