தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! - MK Stalin on Summer actions

TN CM MK Stalin: தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 3:33 PM IST

Updated : Apr 27, 2024, 8:02 PM IST

TN CM MK Stalin

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்.27) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதலமைச்சர், "கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர்த் தேவை அதிகரிப்பு. வெப்ப அலை பிரச்னை குறித்து இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர்த் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினர்.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விடக் குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவலர்களும் கவனமாகச் செயல்பட்டு குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படும் போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே, இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர்த் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்குப் பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளரும், இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கக்கூடிய நிலையில், இந்த முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைப் பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலைச் சந்திப்பதால், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து, சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்தப் பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர் அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ்.சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பி.பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:“யானை பசிக்கு சோளப்பொறி"- புயல் நிதி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்! - D Jayakumar

Last Updated : Apr 27, 2024, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details