வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெப்பாலை பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ தூரத்தில் உள்ள வெப்பாலை என்ற பகுதியில் இயங்கக்கூடிய ரேஷன் கடைக்கு செல்லவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததாகவும், அதற்காக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (செப்.06) ரேஷன் கடை ஊழியர் விடுமுறை எடுத்துக் கொண்டதால், அதற்குப் பதிலாக நேற்று (செப்.08) கடையை திறந்து வைத்துள்ளார். இதன் காரணமாக, வழக்கம்போல் ராமகிருஷ்ணாபுரம் பொதுமக்கள் வெப்பாலை பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர்.
அப்போது, ரேஷன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், வெப்பாலை பகுதியைச் சேர்ந்த யோவான் என்பவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.