தென்காசி:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணியைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் செல்வராஜ் (47). இவர் புளியங்குடியை அடுத்த ராயகிரியில் மின் வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இரவு, புளியங்குடியில் இருந்து காரில் ராயகிரி நோக்கிச் சென்ற போது, ரத்தனபுரியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, இவரது காரை மர்ம நபர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பி ஒட்டியுள்ளார்.
அந்த தாக்குதலில் கதறிய செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அலறல் சத்தம் கேட்டு வந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, எஸ்பி சீனிவாசன், ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய நபரைத் தேடி வந்தனர். அப்போது, அவர் தவறவிட்ட செல்போன் மற்றும் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர்.
இதையும் படிங்க: முதியவரிடம் பணம் கொள்ளை.. லஞ்சம் வாங்கிய SI பணியிட மாற்றம்..சென்னை குற்றச் செய்திகள்!
அந்த விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் புளியங்குடி ரத்தனபுரியைச் சேர்ந்த பெருமாள் மகன் ஷாஜி(46) என்பதும், இவர் ஏற்கனவே சென்னையில் குற்ற வழக்குக்காக புழல் சிறையில் 14 வருடம் சிறையில் தண்டனை அனுபவித்ததும் தெரியவந்தது.
மேலும், பல்வேறு இடங்களில் தங்கி மலைப் பகுதிகளிலும் பதுங்கி இருந்த ஷாஜியை தனிப்படை போலீசார் நேற்று புளியரை பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது, ஷாஜி தாக்கியதில் இரு போலீசார் காயம் அடைந்தனர். தற்போது அவர்கள் இருவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பைக் மீது கார் உரசியதால் அரிவாள் வெட்டு:புளியங்குடியில் இருந்து செல்வராஜ் காரில் சென்ற போது, ரத்தனபுரி விதைப்பண்ணை அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்த ஷாஜி மீது லேசாக உரசியது. அதனைத் தொடர்ந்து பங்க் அருகே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவேசமடைந்த ஷாஜி, மரம் வெட்டுவதற்கு வைத்திருந்த அரிவாளை வைத்து செல்வராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது, எந்த வித தொடர்பும் இல்லாமலும், எலட்ரானிக் பொருட்களை உபயோகிக்காமல் மலைபகுதியில் சுமார் 25 நாட்கள் பதுங்கி இருந்த ஷாஜியை கைது செய்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்ஐ மாடசாமி, காவலர்கள் பாலமுருகன், பால்ராஜ், விஜயபாண்டியன், செல்வக்குமார், மதி, கருப்பசாமி உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்