சென்னை: சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் நோக்கி செல்லும் சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி முன்னால் சென்ற ஒரு கார், இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் என அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிகள் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகில் இருந்த ஆட்டோ மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இருவேறு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் மற்றும் சாலையில் நின்றிருந்த ஒருவரும் என மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி அருகே உள்ள சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்த தந்தையும் மகனும் தப்பி சென்றதாகவும், அந்த காரின் பின்னால் தொடர்ந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இருவரையும் விரட்டிச் சென்று பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, காவல் ஆணையர் அலுவலகம் அருகே காரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இருவரையும் கைது செய்து வேப்பேரி காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.