சென்னை:தமிழ்நாட்டில் வழக்கத்தை விட இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்களைப் பொறுத்தவரையில் சுற்றுப்புற வெப்பநிலையானது, சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அவ்வாறு வியர்வை வெளியேறுவதால் உப்புச்சத்து பற்றாக்குறையும், நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் உடலில் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு, ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படலாம்.
எனவே, வெயிலின் தாக்கம் உணர்ந்து பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.