கிருஷ்ணகிரி: ஒசூரில் நேற்று (நவ.20) நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர் கண்ணன் மிக கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலை நிகழ்த்திய பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்திருப்பது இச்சம்பவத்தில் திருப்புமுனைையாக உள்ளது.
கொலை வெறி தாக்குதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞரான சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார்.
இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின் கணவர் ஆனந்திற்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் தான், கண்ணன் நேற்று மாலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் போது, கண்ணனை வழி மறித்த ஆனந்த் அவரை அரிவாளால் சரமாரியாக கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சை ஆசிரியை ரமணி கொலை... தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்..!
இதில், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த கண்ணன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். அது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. தற்போது ஆபத்தான நிலையில் கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் வழக்கறிஞரும் உடந்தை
இதற்கிடையே, கண்ணனை வெட்டிவிட்டு தப்பிய ஆனந்த் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், அவரது மனைவி சத்யாவதியையும் காவல்துறை கைது செய்துள்ளது. சத்யாவதியிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முயற்சிக்கு அவரும் உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேற்கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்