தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மகன் சந்திரசேகர் (56). இவருக்கு பால்செல்வி என்ற மகளும், ராஜதுரை, ராதாகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
சந்திரசேகர் அவரது மனைவி பூலோக தங்கத்துடன் நாராயணசாமி கோயில் தெருவில் வசித்துவரும் நிலையில், அருகே உள்ள சாயர்புரம் பகுதியில் அமைந்திருக்கும் சின்ன நட்டாத்தியில் உள்ள கண்ணாடிவிளை தோட்டம் என்று அழைக்கப்படும் ஜான் பால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சந்திரசேகர் இரவு நேரக் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 8) வழக்கம் போல் இரவு வேலைக்குச் சென்ற சந்திரசேகர், மறுநாள் காலை வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து, அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். இந்தச் சூழலில், நேற்று (ஜூலை 9) மாலை சந்திரசேகர், அவர் பணியாற்றும் தோட்டத்தில் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்தம் உறைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததாக அந்த தோட்டத்தில் பணியாற்றுபவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாயர்புரம் காவல் ஆய்வாளர் ஜானகி மற்றும் போலீசார் சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாயர்புரம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நேற்று (ஜூலை 9) மதியம் பட்டப்பகலில் சந்திரசேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து, முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இச்சம்பவம் குறித்து கூறுகையில், "கொலையான சந்திரசேகருக்கு பெரிய அளவில் முன்விரோதம் எதுவும் இருந்ததாக விசாரணையில் தெரியவில்லை. சிறிய அளவில் நடந்த தகராறு ந்ந்தோ ஒன்றின் அடிப்படையில் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்வர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராணுவ வீரரை புடவையால் இறுக்கி கொலை செய்த மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்..! நடந்தது என்ன?