சென்னை: கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவரிடம் தான் காவல் அதிகாரி பேசுவதாகவும், சமூக வலைத்தளத்தில் 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த வழக்கில் உங்கள் மகள் உட்பட நான்கு பேரை விசாரித்து வரும் நிலையில், உங்கள் மகள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், அவரிடம் பேசுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், உங்கள் மகளின் அடையாள அட்டை வைத்து வேறு யாராவது இந்த மோசடியில் ஈடுபட்டார்கள் எனக் கூட இந்த வழக்கை மாற்ற முடியும் எனக்கூறி, உங்கள் மகளை விடுவிக்க பணம் தர வேண்டும் எனக் கூறி ஜிபே எண்ணைக் கொடுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர், தனது நண்பர் மூலம் அவரது மகளிடம் விசாரணை செய்தபோது, அவர் அது போன்று எதுவும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் சென்னை சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் யாரேனும் உங்கள் மகள், மகன் கடத்தி விட்டதாக அல்லது விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்வதாகவும் கூறி பணம் கேட்டால், உங்கள் மகள்களைத் தொடர்பு கொண்டு உறுதி செய்ய வேண்டும் எனவும், இது குறித்து புகார் அளிக்க 1930 என்ற இலவச உதவி என்னை அழைக்கவும், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
சாலையில் அமர்ந்து சட்டக்கல்லூரி மாணவி போராட்டம்:சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ராதா என்ற சட்டக் கல்லூரி மாணவி, தனது காதல் கணவரும், காவலருமான நூருதீன், தனது உறவுக்காரப் பெண் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும், அதனை தட்டிக்கேட்ட தனது தாய்மாமனை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
உறவுக்கார பெண்ணிடம் தகாத உறவு வைத்துள்ள நூருதீனை தட்டிக்கேட்ட தனது தாய்மாமாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி, நேற்று மாலை காவல் ஆணையர் அலுவலகத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரிடம் போலீசார் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.
நகை பறிக்க முயன்ற தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கைது:சென்னை அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்து விட்டு திரும்பிய ஊழியர் ஒருவர், அக்குடியிருப்பின் வாசலில் நின்று கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்போனைப் பறிக்க முயன்றுள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிட்டதால், அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அந்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதையடுத்து அப்பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி இருசக்கர வாகனத்தின் பதிவினை வைத்து விசாரணை செய்த போது, சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது அலிகான் என்ற நபர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த அண்ணா நகர் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 நாட்களில் வளைகாப்பு; ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி மரணம்.. கொல்லம் ரயிலில் நேர்ந்த கொடுமை! - Pregnant Woman Falling From A Train