சென்னை:சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நேற்று (மே.05) இரண்டு ராட்வைலர் நாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய் உரிமையாளர் புகழேந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆயிரம் விலக்கு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் காப்பாற்ற முயன்ற தாய் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா கூறியதாவது, "புகழேந்தி இதே பகுதியில் ரத்த வங்கு (Blood Bank) நடத்தி வருகிறார். அதோடு அவர் இரண்டு ராட்வைலர் நாய்களையும் வளர்த்து வருகிறார். அவர் ரத்த வங்கி நடத்தி வரும் ஒரே காரணத்திற்காக அவர் வளர்த்து வரும் நாயால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. முன்னதாக ஒருவரை இந்த நாய் துரத்தியுள்ளது. அதேபோல் தெரு நாய்களையும் தாக்கி உள்ளது.
இந்த நிலையில், 5 வயது சிறுமியை புகழேந்தியின் ராட்வைலர் நாய்கள் கடித்துள்ளது. ராட்வைலர் வளர்க்க தடை இருந்தும் அவர் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். சிறுமியின் தாய் சோனியா அவரின் உயிரைப் பணைய வைத்து நாயிடமிருந்து சிறுமியை பலத்த காயங்களுடன் மீட்டார்.
ஆனால், நாயின் உரிமையாளர் புகழேந்தி உடனடியாக சென்று நாயை பிடிக்காமல் நின்று வேடிக்கை பார்த்து உள்ளார். நாயை பிடித்திருந்தால் சிறுமிக்கு இவ்வளவு காயங்கள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற நாய்களை வளர்க்க தடை இருந்தும் அவர் வளர்த்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாது இனப்பெருக்கம் செய்து விற்பனையும் செய்து வருகிறார்.