திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கமல்நாதன் - இலக்கியா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கமல்நாதனின் அக்காவான மணிமேகலை என்பவரின் மகன்களான கோதண்டன் (33) மற்றும் மோகன் குமார் (30) ஆகிய இருவரும், அவ்வப்போது கமல்நாதனின் 18 வயது மகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கோதண்டன் சென்னையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தச் சூழலில், நேற்று (மே 4) மாலை 6 மணியளவில் கோதண்டன் மற்றும் அவரது சகோதரர் மோகன் குமார் ஆகிய இருவரும் கமல்நாதனின் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கமல்நாதனின் மகள் கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த அவருடைய பெற்றோர், கோதண்டன் மற்றும் அவரது சகோதரர் மோகன் குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது, கமலநாதன் குடும்பத்தினரை கோதண்டன் மற்றும் மோகன் குமார் தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் கமலநாதன் அவருடைய மனைவி இலக்கியா, அவருடைய மகள் மற்றும் இதனை தடுக்கச் சென்ற கோதண்டன் மற்றும் மோகன் குமாரின் தாயான மணிமேகலை ஆகியோர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.