கோயம்புத்தூர்: கோவையில் உள்ள பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, ஓவிய ஆசியரைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் கோவையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ராஜன் வகுப்பு நேரத்தில் ஓவிய பயிற்சி அளிக்கும் போது, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. மேலும், பள்ளியில் ஓவிய வகுப்பு மற்றும் யோகா வகுப்பு எடுக்கும் போது மாணவிகளை தவறாக தொட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரைத் தொடர்ந்து, மாணவிகளிடம் பள்ளி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில், ஓவிய ஆசிரியர் ராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், பள்ளி முதல்வர் ஓவிய ஆசிரியர் ராஜன் மீது காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஓவிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ குறித்து விழிப்புணர்வு:
தற்போது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், கோவை மாநகர போலீசார் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தினர் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:இனி மாணவிகளின் பிரச்சினைகளை கேட்டறிய “போலீஸ் அக்கா” வந்தாச்சு!..
இதுகுறித்து மாநகர போலீசார் கூறுகையில், "வாரம் தோறும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று மகளிர் போலீசார் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தங்களுக்கே தெரியாமல் மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால், இதன் மூலம் தெளிவு பெற்று, அங்குள்ள பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தப்படும். பின்னர், சம்பவம் உறுதி செய்யப்பட்டால் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது போக்சோ பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிகளவில் விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்.