தேனி: கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமான கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள் மற்றும் வாத்துப்பண்ணைகளில் உள்ள பறவைகளை அம்மாநில கால்நடைத் துறையினர் அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்லை மாவட்டமான தேனியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் உத்தரவுப்படி, கால்நடை அரசு மருத்துவர் சிவசக்தி தலைமையில், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களைக் கொண்ட மருத்துவக் குழுவினர், குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனைச் சாவடிகளில் பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.