சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, "கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர நிகழ்வுக்கு, மேற்கு வங்க மாநில அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு பாதுகாப்பான ஓய்வு அறைகள் மற்றும் பாதுகாப்பை வழங்காத, 36 மணி நேரம் தொடர்ச்சியான பணி வழங்கிய மேற்கு வங்க அரசே முதல் காரணமாகும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளை பற்றி கவலைப்படாத, ஆய்வுகளை மேற்கொண்டு குறைபாடுகளை சரிசெய்யாத, மாணவர்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாத, மாணவிகளுக்கு ஓய்வு அறைகள் கூட இல்லாததைக் கண்டறியாத, உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் ஊழல் மிகுந்த தேசிய மருத்துவ ஆணையமும் (NMC), மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இரண்டாவது காரணமாகும்.
எனவே, மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட இக்கொடுமைக்கு மேற்கு வங்க அரசு, மத்திய அரசு மற்றும் NMC ஆகியவை பொறுப்பேற்க வேண்டும். மேலும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நட்டா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவரும், அதன் அனைத்து போர்டுகளின் தலைவர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.