அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம், ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை அப்பகுதியில் இருந்த முதலைக் கடித்ததில் பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் உள்ளது. இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். அந்தவகையில், அப்பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா(70) என்பவர் நேற்று (சனிக்கிழமை) மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது, ஆற்றில் கரையோரம் இளைப்பாறுவதற்காக வந்து புதருக்குள் படுத்திருந்த இருந்த முதலை, திடீரென சீறிப் பாய்ந்து இந்த மூதாட்டியின் காலை கடித்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஈரோட்டில் சிக்கிய சிறுத்தை அந்தியூர் வனப்பகுதியில் விடுவிப்பு! - Andhiyur Forest