கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சந்திரலால் (54) என்பவர், நேற்று முன்தினம் (ஏப்.24) நாகர்கோவிலில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அவர் இரவு சொந்த ஊருக்குச் செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார், அப்போது, அவர் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, இரத்தம் சொட்டச் சொட்ட சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலையில் அடிபட்டு ரத்தம் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அவருக்கு உரிய முதலுதவி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்பு, அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் கொண்டு வரப்பட்ட அந்த நபரின் தலையில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்த நிலையில், அவருக்கு எந்த உதவியும் செய்வதற்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் யாரும் முன்வராமல், தொடர்ந்து அந்த நபரை வந்து வந்து பார்த்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரது தலையில் இருந்து வெளியேறிய ரத்தம், அந்தப் பகுதி முழுவதும் சென்று, அங்கிருந்த சக நோயாளிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் தன்னால் முடியாத நிலையில் அவர் இருக்கையில் சரிந்து விழுந்துள்ளார்.