நீலகிரி:சுற்றுலாத் தலத்திற்குப் பெயர் போன நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது தொடர்கதை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு உதகை நகரில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில் கரடியானது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக G1 காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. பின்னர் மீண்டும் அப்பகுதியில் இருந்து வெளியேறி, ஸ்டேட் பேங்க் காலணி மற்றும் குடியிருப்பு சாலைகளில் உலா வந்தது. அதிகாலை வரை உதகை நகரில் சுற்றித்திரிந்த கரடி விடிவதற்குள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கரடி, யாணை காட்டொருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எனப் பலரும் அச்சமடைந்து வருகின்றனர்.