மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த விஜயகுமார் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் தொகுதிக்கு என 5 கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்று பொதுப்பணிகளுக்காக பயன்படுத்தலாம்.
நான் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் எம்பி நிதியில் இருந்து, சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் நினைவுச் சின்ன தேசியக்கொடி அமைப்பது தொடர்பாக முடிவு செய்து, அதற்கான திட்ட அறிக்கையும் தயார் செய்தோம். 2022ஆம் ஆண்டு அதற்கான அனுமதி பெறப்பட்டு, நினைவுச் சின்ன தேசியக்கொடி கம்பம் 147 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது அதில் தேசியக்கொடி பறக்க விடப்படுவதில்லை. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 148 அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் இரண்டாவது உயரமான கொடிக் கம்பமாக இது அமைந்துள்ளது. அது முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது வரை கொடி பறக்க விடப்படாமல் வெறுமனே உள்ளது.
சுற்றுலாத் தலமாக இருக்கும் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னமான கொடி கம்பத்தில் மீண்டும் தேசியக்கொடியை பறக்கவிட தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.