மதுரை:டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு மனுக்கள் விசாரணை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூடுதல் பதிவாளருக்கு, டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எல்.விக்டோரியகெளரி அமர்வு முன்பாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு மனுக்களை வேறு அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதி முன்பு வைக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். ஆனால், டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை தவிர்க்கவும், மேல்முறையீடு மனுக்களை இதே அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையின் வீடியோ ஒன்று ஒரு பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டும், நீதிபதி கோவமாக பேசுவது போன்று மாற்றப்பட்டும் செப்டம்பர் 30ஆம் தேதி பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிலர் இந்த வீடியோவை, நீதிமன்றம் மற்றும் மூத்த வழக்கறிஞரை இழிவுபடுத்தும் மோசமான கருத்துக்களுடன் இருப்பதாக 'X' வலைதளம் உட்பட பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத வீடியோவை 'X' வலைதளம் மற்றும் இஸ்டாராகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்ற விசாரணை தொடர்பான வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதமாகும். அதிலும், வீடியோவை எடிட் செய்தும் மாற்றம் செய்தும் பகிர்வது மீகப்பெரிய குற்றமாகும். ஆகவே, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.