மதுரை: திருச்சியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் அதில், "திருச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டி வருகிறேன். இது சட்ட விரோத கட்டுமானம் என மாநகராட்சி சார்பில், எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நான் எனது கட்டுமானத்தை வகைப்படுத்தி முறைப்படுத்தத் திருச்சி மாநகராட்சிக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளேன். இந்த நிலையில் எனக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சட்ட விரோத கட்டுமானங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு அரசாணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், 2 மாதம் கால அவகாசம் கொடுங்கள். இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறோம்" என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "உள்ளாட்சி அமைப்புகளில் சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்டத்தில் இது வரை எத்தனை முறை கூடி விவாதித்து உள்ளனர்? அந்தந்த நகராட்சி அமைப்புகளில் எத்தனை சட்டவிரோத கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?
மேலும், சட்ட விரோத கட்டுமானங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு நடவடிக்கை எடுக்கவா? சட்டவிரோத கட்டுமானம் மேற்கொண்டவர்களைப் பாதுகாக்கவா? உள்ளாட்சி அமைப்புகள் சட்டவிரோத கட்டுமானங்கள் மீது அரசாணை வெளியிட்ட பிறகு, கடந்த ஒரு மாதமாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
உள்ளாட்சி அமைப்புகளில் சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்ட பிறகு, 38 வருவாய் மாவட்டங்களில் எத்தனை கூட்டங்கள் நடந்துள்ளது? இது வரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?" என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினர்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பல் அடுக்கு சட்ட விரோத கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தொடர்புடைய துறை செயலாளர்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் சட்ட விரோத கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:வடலூர் வள்ளலார் ஞானசபை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!