தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூர் அடுத்த பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் காரைக்காலில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், காரைக்கால் துறைமுகத்தில் சரக்கு ஏற்றிச் செல்ல லாரி உள்ளிட்ட வாகனங்கள் வாடகைக்கு விடும் தொழிலையும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாபு தனது மகன் பாலாவுடன், தஞ்சாவூர் ராஜாமணி நகரில் உள்ள அவரது நண்பர் வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்வில் கலந்து கொள்ள தனது காரில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஞானம் நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகே வந்த போது, எதிர் திசையில் வந்த சொகுசு கார் ஒன்று பாபு வந்த காரை வழிமறித்து நின்றுள்ளது.
பின்னர், வழிமறித்த காரில் இருந்து இறங்கிய கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலையில் பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர், இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழில் போட்டி காரணமாக கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்கள் யார் என்பது முழுமையான விசாரணைக்குப் பின்பு தெரிய வரும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சிகள்!