சென்னை: கோயம்பேடு பகுதியில் உள்ள சின்மையா நகர் மணவாளன் சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மதன்குமார் - சிலம்பரசி. இவர்களுக்கு ௧௬ வயதுடைய மகன் ஒருவர் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றை முன்தினம் (அக்.05) இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்று விட்டு வீட்டிற்கு வராமல் நேற்று (அக்.06) காலை வீட்டிற்கு வந்ததாகவும், இதனை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தனது நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு, கோயம்பேடு குலசேகரபுரத்தில் உள்ள கழிவுநீர் ஊந்து நிலையத்தில் உள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவன் கழிவுநீர் கிணற்றுக்குள் சடலமாக இருப்பதைக் கண்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் கிணற்றில் சடலமாக இருந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கயிற்றை கட்டியும் ஆக்ஸிஜன் கருவி பொருத்தியும் உள்ளே இறங்கி 4 மணி நேரம் போராடி மேலே எடுத்து வந்துள்ளனர். இதன் பின்னர், கோயம்பேடு போலீசார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.