கோயம்புத்தூர்:கோயம்புத்தூர்பீளமேடு, அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் எம்.பி கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசுகையில், "முதலமைச்சரின் கட்டளைக்கு இணங்க கன்னியாகுமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளையும் பெற்று வருகிறோம். அதே சமயம் தொழில அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் உள்ளிட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். மக்களும், தொழில் அமைப்பினரும் எங்களை சந்தித்து வருகின்றனர்.
கோவையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தொழில அமைப்பினர் குறிப்பாக, சிறு குறு தொழில் செய்பவர்கள் கடந்த காலகட்டத்தில் இருந்து பிரச்சனை சந்தித்து வருகின்றனர். பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா போன்ற காலங்களிலும் பிரச்சினைகள் தொடர்கிறது. சிறு குரு தொழில் அமைப்பினர் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டியில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அதை கட்ட முடியாமல் சிறு குறு அமைப்பினர் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருப்பதாகவும் கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இவை அனைத்தும் தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வோம். ஜி.எஸ்.டியில் இருக்கும் குழப்பங்கள் தீர்க்க வேண்டும், தொழில்துறையினர் தொழில் செய்வதற்கான உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் அடங்கிய கோரிக்கைகள் அதிக அளவில் இருந்தது. மேலும் மின் கட்டணம் உயர்வை செவி சாய்க்காமல் இல்லை, பலமுறை அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். கோரிக்கைகளை ஒரே நேரத்தில் சரி செய்ய முடியாது.
கோவைக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செய்ய முடியாமல் போனதற்கு மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டதன் காரணம். ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. நிதி குறைவாகவே ஒதுக்கியதால் திட்டங்களை செய்ய முடியவில்லை.