தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசு தின விழா: முதலமைச்சரின் வரவேற்பை ஏற்று, கொடியேற்றி வைத்தார் ஆளுநர்! - REPUBLIC DAY FLAG HOIST

இந்திய நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

குடியரசு தின கொடியேற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
குடியரசு தின கொடியேற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 9:06 AM IST

சென்னை:இந்திய நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று ( ஜன.26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின் ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவ ஆளுநர் ஆர்.என் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் - 2025 வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் / பொது மக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது.

இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் (ரூ.1,00,000) காசோலையும், ரூ.9.000 (ரூபாய் ஒன்பதாயிரம்) மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இந்நிலையில் இவ்வாண்டுக்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை கீழ்க்கண்ட நபருக்கு முதலமைச்சர் வழங்குகிறார்கள்.

வெற்றிவேல்:

சென்னையில் கடந்த 12.11.2024 அன்று மாலை 5.40 மணியளவில் அடையாறு எம்.ஜி.எம் மலர் மருத்துவமனை அருகே அடையாறு ஆற்றில் மூன்று பேர் உயிருக்குப் போராடி வருவதாகத் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக முன்னணி தீ அணைப்பவர் 7578 கே.வெற்றிவேல் தலைமையில் மெரினா மீட்புக்குழுவும், அவசரக்கால மீட்பு ஊர்தியும் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து ஆற்றில் இறங்கி சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், அவரது துணிச்சலான செயலை பாராட்டி, வெற்றிவேலுக்கு 2025ஆம் ஆண்டிற்கான வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அமீர் அம்சா:

ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காகச் சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படும். இப்பதக்கம் பெறுபவர்களுக்குப் பதக்கமும். ரூ.5 லட்சம் கோப்புக் காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு (2025) 'கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கம்' ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சா என்பவருக்கு வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:பத்ம பூஷன் விருது: "மனைவியும், தோழியுமான ஷாலினிக்கு நன்றி" - நடிகர் அஜித்!

அமீர் அம்சா அவர்கள் 'அப்பாஸ் அலி டிரஸ்ட்' என்ற பெயரில் சொந்தமாக மாருதி ஆம்புலன்ஸ் வேன் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் சேவை செய்து வருகிறார். இதுவரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களின் பிரேதங்களை காவல்துறை உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்துள்ளார். இந்த சேவையை சாதி / மத பேதமின்றி செய்து வருகிறார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களைப் பாதுகாப்பது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற சேவைகளையும் செய்து வருகிறார்.

இவரது சேவையானது நல்லிணக்கத்திற்குச் சான்றாக வகுப்புவாத விளங்குகிறது. இவ்வாறு மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டுவரும் அமீர் அம்சாவை பாராட்டும் வகையில், 2025ஆம் ஆண்டிற்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்படுகிறது. மேலும் வேளாண்மைத் துறையின் சிறப்பு விருது சி.நாராயணசாமி நாயுடுவிற்கும், நெல் உற்பத்தித் திறனுக்கான விருது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details