தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் தேனி:தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது, வெங்கட் பிரபு இயக்கும் GOAT என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடத்து வருகிறார். இது விஜய்யின் 68வது படமாகும். நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
அண்மையில் கூட 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, பரிசு உள்ளிட்டவைகளும், அதே போல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவார பொருள்கள், உள்ளிட்ட உதவிகளை விஜய் நேரடியாகச் சென்று வழங்கினார்.
இவை அனைத்தும் விஜய் விரைவில் அரசியலில் நுழையவுள்ளார் என்பதற்கான சான்றுகள் என்று பலரும் கருத்து வந்த வேலையில்,கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
நடிகர் விஜய் இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு, தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். இதில் 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார் விஜய்.
இதனையடுத்து, தன்னுடைய அரசியல் கட்சியை வலுப்படுத்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்டவற்றை வலுப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார் த.வெ.க. தலைவர் விஜய். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 500பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவர்கள் அனைவரும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றிய விஜய் ரசிகர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியானது, தேனியில் உள்ள தேனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காகத் தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர், வாகனத்தில் ஊர்வலமாகத் தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்திற்கு வருகை தந்தன. பின்னர் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் லெஃப்ட் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:அரசுப் பள்ளியில் நூலகம் அமைத்துக் கொடுத்த வலிமை பட இயக்குநர் எச்.வினோத்? எஸ்பி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!