செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் விக்கி என்ற விக்னேஷ் (27) பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்திற்கு வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை தங்கராஜ் மறைமலைநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், மறைமலை நகரை அடுத்த கோவிந்தாபுரம் விசு என்ற விஸ்வநாதன் (23), கோகுலாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தில்கேஷ் குமார் (24) ஆகியோர் சம்பவத்தன்று நண்பர் விக்னேஷை மது அருந்துவதற்காக கோவிந்தாபுரம் ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, தனிப்படை போலீசார் கோகுலாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைமலைநகர் அருகே தனியார் பார் ஒன்றில் விக்னேஷ் மது குடித்திருந்தபோது கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த விசு என்கிற விசுவநாதன், விக்னேஷ் வைத்திருந்த சைடிசை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
இதில் விக்னேஷிற்கும், விசுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி விசுவை விக்னேஷ் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த விசு, விக்னேஷை பழி தீர்க்க வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளார்.