மதுரை: திருமங்கலம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் சார்பில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, எந்த தொகுதியில் யாரை நிறுத்துவது? யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும்? என தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றன. இதற்கிடையே, ஆட்சிக்கட்டிலில் உள்ள பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி கட்சிகளும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாஜகவின் என்டிஏ கூட்டணியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இவைகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டுமென திமுக கூட்டணி கட்சிகளும், திமுகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென அதிமுக கூட்டணியும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திட்டமிட்டு வருகின்றனர். தவிர மற்றொரு பக்கம் பாஜக தலைமையிலான புதிய கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் பகுதியில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், நடக்க வர 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடி நகராட்சியிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு தொலைவுக்கு அப்பால் அமைக்க வேண்டும்.
ஆனால், இந்த சுங்கச் சாவடி நகராட்சியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைத்துள்ளதாகவும், கப்பலூர் சுங்கச்சாவடி அருகே ரயில்வே மேம்பால இறக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் சுங்கச்சாவடி விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால் அடிக்கடி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் மக்களிடம் கட்டாய வசூல் செய்ய சுங்கச்சாவடி நிர்வாகம் நிர்பந்தம் தெரிவித்து வந்த நிலையில், இது தொடர்பாக திருமங்கலம் தொகுதி மக்கள் மற்றும் வேன், டாக்சி உரிமையாளர் சங்கம், கப்பலூர் தொழிற்பேட்டை ஊழியர்கள், தொழிலாளர்கள், வர்த்தகம் மற்றும் வணிகவியலாளர்கள் உள்ளிட்டோர் பலமுறை சுங்கச்சாவடிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் வாயிலாக இது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த சுங்கச்சாவடிக்கு தீர்வு காணப்படாத நிலையில் 'திருமங்கலம் தொகுதி' மக்கள் சார்பில் விதிமுறை மீறி அமைத்துள்ள சுங்கச்சாவடியை அகற்றும் வரை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திருமங்கலம் நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் எப்போது? - சத்யபிரதா சாகு விளக்கம்!