கடலூர்:கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(40). இவர் அதேபகுதியில் அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், வங்கி போன்ற இடங்களில் அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் ஏலம் போவதைத் தவிர்க்க நிதியுதவி செய்து, அந்த நகையை மீட்டு விற்கவோ, மறுஅடகு வைக்கவோ உதவி செய்து, அதற்கான கமிஷன் பெறும் வேலையையும் செய்து வருகிறார். அதற்கு ஏஜென்டாக சிதம்பரத்தைச் சேர்ந்த அருண் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அவரது 25 சவரன் நகையை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.7.5 லட்சத்திற்கு அடகு வைத்துவிட்டு, தற்போது அதை மீட்க முடியாமல் சிரமப்படுகிறார் எனவும், ஆகையால், அதனை மீட்டு மறுஅடகு வைக்கப் பணம் வேண்டும் எனவும் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகையால், சந்திரசேகரன் கடந்த 2023 அக்டோபர் 4ஆம் தேதி சீர்காழியில் உள்ள வங்கிக்கு அருண் மற்றும் மணிகண்டனுடன் சென்று ரூ.7.5 லட்சம் பணத்தைச் செலுத்தியுள்ளார். அப்போது, வங்கி மேலாளர், சர்வர் சரியாக வேலை செய்யவில்லை, அதனால் மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் வாருங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, சந்திரசேகர் மற்றும் அருண் இருவரும் மதியம் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது, மணிகண்டன் வங்கியில் இல்லை எனக் கூறப்படுகிறது. சந்தேகமடைந்து மேலாளரிடம் கேட்டபோது, அவர் நகையை மீட்டுவிட்டுச் சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மணிகண்டனை தொலைப்பேசியில் அழைக்க முயன்றுள்ளனர். அப்போது, தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்து, கடந்த 2023 நவம்பர் 21ஆம் தேதி மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.