ஈரோடு:தாளவாடி அடுத்த திகினாரை பகுதியைச் சேர்ந்தவர், தாயப்பா. விவசாயம் செய்துவரும் இவர், பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தன்னுடைய பசுமாடுகளை அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் (மார்ச் 3) தன்னுடைய மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.
இந்நிலையில் திகினாரை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 மாடுகள், அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்துள்ளது. இதில், நாட்டு வெடிகுண்டு வெடித்து, மாட்டின் வாய் பகுதி முழுவதுமாக சிதைந்ததால் 2 மாடுகளும் உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், மர்மநபர்கள் காட்டு பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தாளவாடி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு வைத்த நபர்களை தேடி வந்தனர்.
இதில், நாட்டு வெடிகுண்டை கடித்து மாடு உயிரிழந்ததற்கு, நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த லூர்து ராஜ் என்ற தன்னா (45), திகனாரை கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி (37) ஆகியோர் காரணம் என்று தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் தாளவாடி காவல்துறையினர் கைது செய்து, ஜீரகள்ளி வனச்சரக அலுவலர் ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “ வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சிலர் அவுட் காய் எனப்படும் நாட்டு வெடிக்குண்டை பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தில் வெடி மருந்துகள் எளிதாக கிடைப்பதால் இது போன்ற நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது அதிகரித்துள்ளது. எனவே, அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையிநர் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கல்பாக்கத்தில் அமைய இருக்கும் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? ஆபத்தா?