சென்னை:சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டிலிருந்து விமானங்களில், சென்னைக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த தனியார் விமான பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தபோது, சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர், துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது நடத்தையின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரிடன் செய்த சோதனையில், அவரின் 2 ஷூக்களிலும் வைக்கப்பட்டிருந்த மிதியடிகளை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில், 1 கிலோ 300 கிராம் தங்கப் பசை இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு, ரூ.85 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்கப் பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், நூதனமான முறையில் ஷூக்களின் மிதியடிக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த, சென்னையைச் சேர்ந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல, தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டுக்குச் சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை செய்தனர்.
மேலும், அந்த பெண் பயணியின் உடைமைகளைப் பரிசோதித்தனர். அதற்குள் 350 கிராம் எடையுடைய தங்க செயின்கள் மற்றும் வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண் பயணியோ அவைகள் கவரிங் நகைகள் என்று கூறியுள்ளார். அப்போது சுங்க அதிகாரிகள் அந்த நகைகளை பரிசோதித்த போது, அது தங்க நகைகள் என்று உறுதியானது. மேலும் அதன் சர்வதேச மதிப்பு ரூ. 23 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பெண் பயணியைக் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரே நாள் இரவில் துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளிலிருந்து, சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு பெண் பயணி உட்பட இரண்டு பேரைக் கைது செய்துள்ள சம்பவம் சகபயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமாபுரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த ஐந்து பேர் கைது!