திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே 17 வயது சிறுமியை கொட்டாம்பட்டி அருகே உள்ள 19 வயதான இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த இளைஞர், காதலியை (சிறுமியை) துவராபதி பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இளைஞருக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி காதலி காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர் அவரது சித்தப்பா வீட்டில் இருந்த காற்று துப்பாக்கியால் (AIR GUN) காதலியை சுட்டார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.