தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி இரு கால்களை இழந்த 18 வயது இளைஞன்..நிவாரணம் கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை! - மின்சாரம் தாக்கி விபத்து

villupuram news: விழுப்புரம் அருகே மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் தனது இரு கால்களையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் இரு கால்களை இழந்த இளைஞன்
மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் இரு கால்களை இழந்த இளைஞன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 6:06 PM IST

மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் இரு கால்களை இழந்த இளைஞன்

விழுப்புரம்:விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து மகன் பூபாலன் (18). கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி மாலையில் தன் நண்பர்களுடம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கையில், கிரிக்கெட் பந்து அருகே உள்ள பள்ளியின் மொட்டை மாடியில் விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதால், மறுநாள் காலையில் பூபாலன் பந்தை எடுப்பதற்காக பள்ளியின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

முன் இரவில் பெய்த மழை நீர் மொட்டை மாடியில் தேங்கி நின்றதால் வெற்றுக் காலுடன் சென்று பந்தை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது உயர் அழுத்த மின் கம்பி பூபாலன் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கியுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு எழுந்த பூபாலனால் கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் அவர் கூச்சலிட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில், மின்சாரம் தாக்கியதில் பூபாலனின் கால்களில் இரத்த ஓட்டம் நின்றுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பூபாலனின் இரு கால்களையும் முழங்காலுக்கு கீழே அகற்றியுள்ளனர்.

முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு சோழம்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் தாழ்வான நிலையில் இருக்கும் 22 கிலோ வாட் உயர் அழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்குமாறு ஊராட்சி மன்றம் சார்பில் பூத்தமேடு துணை மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அபாய நிலையில் இருக்கும் மின்கம்பியை மாற்ற கோரி மனு அளித்தும் மாற்றாத நிலையில் பூபாலன் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானது மின்சாரத்துறையின் அலட்சியத்தால் தான் என ஊர்மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் பூபாலனின் தந்தை மாரிமுத்து காணை போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் ஜனவரி 20ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மின்வாரிய செயற் பொறியாளர் சுரேஷ் குமார், விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் லட்சுமிக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில், விபத்து நடைபெற்ற மறுநாள் 19ம் தேதி மின்பாதை மாற்றி அமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து நடைபெறுவதற்கு 11 மாதங்கள் முன்பே மின்பாதையை மாற்றி அமைக்க மின்வாரியம் அனுமதி அளித்தும் அதை மின்வாரிய அலுவலர்கள் செயல்படுத்தாததால் தான் இவ்விபத்து நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து விழுப்புரம் தலைமை மின்வாரிய பொறியாளர் காளிமுத்துவிடம் கேட்ட போது, "இது குறித்து மேற்பார்வை பொறியாளரிடம் தகவல் பெற்றுக்கொள்ளுங்கள். ரூ 5 லட்சம் வரை மின் வாரியம் இழப்பீடு வழங்கலாம். ஆனால் மேற்பார்வை பொறியாளர்தான் முடிவெடித்து அறிக்கை அனுப்ப வேண்டும்" என்றார்.

இதனை தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் லட்சுமியிடம் கேட்டபோது, "பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 01.04.2022 முதல் 01.04.2023 வரை 29 மின் விபத்துகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 10 மின் விபத்துகள் ஏற்பட்டு மனிதர்களும், விலங்குகளும் இறந்துள்ளதாக மின் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details