சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆணையத்தின் புலன் விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில், அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த V.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி-யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி-யாக இருந்த பி.மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மனுதாரர் தரப்பில், மாவட்ட ஆட்சியர், 3 சிறப்பு தாசில்தார்கள், முக்கிய சாட்சியான சிபிஐ மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகளை இணைத்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.