தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடுகள் கண்டெடுப்பு! - COPPER PLATES DISCOVERED AT MAPPEDU

திருவள்ளூர் அருகே மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்
கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 1:28 PM IST

திருவள்ளூர்:கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,057 ஆண்டுகள் பழமையான ஆதித்த கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட இக்கோயில், 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.

இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையைக் கொண்ட இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, இந்த செப்பேடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, செப்பேட்டில் சமஸ்கிருத மொழியில் நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் எழுதப்பட்டிருந்ததால், அதன் புகைப்படங்களை கர்நாடகா மாநிலம் - மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் பள்ளியில் நடைபெற்ற கல்வெட்டுகள் பயிலரங்கம்!

செப்பேடுகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குனர் கே.முனிரத்தினம், “ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் நிலங்கள் தானமாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய டெல்லியில் இருந்து இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவினர், மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த பின்பு, அந்த கண்டறியப்பட்ட செப்பேடுகளை கிராமத்தின் வரலாற்றை வரும் காலத்தில் சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையில் கோயில் உள்ளே வைத்து பாதுகாக்க வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details