சிவகங்கை: கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் கா.காளிராசா, கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டிறுந்த நிலையில், அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் காளிராசா கூறுகையில், ‘‘கல்லல் அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் பகுதியானது நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த பகுதி. இங்குள்ள மும்முடீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இப்பகுதியில், தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாய் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனக்கண்மாய்:அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோயிலுக்குச் செல்லும் வழியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது.கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.
அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்:சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப்பெற்று சசிவர்ணத்தேவர் அவர்களால் 1730 ல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம் உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 1801ல் இருந்து இஸ்திமிரார் ஜமீன்தாராக, கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்றிலிருந்து ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது.
கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது வேறு சமூகத்தை சார்ந்த மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி, என் சரித்திரம் நூலில் உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோயிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படியும் இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.