சென்னை:ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரயிலில் கஞ்சாக்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதனைத் தடுக்கும் விதமாக ரயில்வே இருப்புப் பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி வந்த பினாகினி விரைவு ரயிலில் இருந்து இறங்கிய 2 நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடைமேடையில் சுற்றித் திரிந்துள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் பிடித்த போலீசார், அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க:எஸ்பிஐ ஏடிஎம் மட்டும் டார்கெட் ஏன்? - வடமாநில கொள்ளையர்களிடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
கஞ்சா பறிமுதல்:அந்த சோதனையில், தேனி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (41) என்பவர் தான் அணிந்து வந்த சோல்டர் பையில் 8.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23) என்கிற வாலிபர் தனது சோல்டர் பையில் 6 கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திக்கொண்டு சோல்டர் பையில் உடைமைகளுக்கு நடுவே மறைத்து வைத்துக் கொண்டால் போலீசாரிடம் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்கிற எண்ணத்தில் கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.