தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வின் போது இறந்த தந்தை.. துக்கத்திலும் 514 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா! - TN Board Results - TN BOARD RESULTS

Villupuram 12th std Student Anita: 12ம் வகுப்புப் பொதுத் தேர்வின் போது தனது தந்தையை இழந்த துக்கத்திலும் மாணவி அனிதா 514 மதிப்பெண் எடுத்துள்ளார். அவரைப் பாராட்டும் விதமாக எம்.ஆர்.கே பெட்ரோல் பங்க் மற்றும் சுபம் டி.வி.எஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் ரா.குமார் ரூ.5000 உதவித் தொகை வழங்கினார்.

மாணவி அனிதாவிற்கு சுபம் டி.வி.எஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் ரா.குமார் உதவித் தொகை வழங்கும் புகைப்படம்
மாணவி அனிதாவிற்கு சுபம் டி.வி.எஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் ரா.குமார் உதவித் தொகை வழங்கும் புகைப்படம் (photos Credit: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 10:00 AM IST

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயலு(54). இவர் சைக்கிளில் சென்று மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் அனிதா 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, மாணவி அனிதா கடந்த மார்ச் 1ஆம் தேதி தமிழ் தேர்வு எழுதிவிட்டு, 5ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கில தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தார்.

கடந்த 4ஆம் தேதி சைக்கிளில் மிளகாய் வியாபாரத்திற்குச் சென்ற சுப்பராயலு, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கார் மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. தந்தை உயிரிழந்து சடலமாக வீட்டில் கிடத்தப்பட்டிருந்த போதும், அனிதாவின் சகோதரிகளும் தாயாரும் அவரை தேர்வுக்குச் செல்லுமாறு ஊக்கப்படுத்தினர். கண்ணீரோடு தேர்வு எழுதி விட்டு அனிதா வீடு திரும்பிய பின்னர், சுப்பராயலுவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், அனிதா 514 மதிப்பெண்கள் பெற்று 86 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் - 99, ஆங்கிலம் - 63, வரலாறு - 77, பொருளாதாரம் - 91, வணிகவியல் - 93, கணக்குப்பதிவியல் - 91 மதிப்பெண்களை மாணவி பெற்றுள்ளார். தந்தை இறந்த நாளில் அவர் எழுதிய ஆங்கில பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அனிதா கூறும் போது, "எனது தந்தை சைக்கிள் மூலம் மிளகாய் வியாபாரம் செய்து எங்கள் 5 பேரையும் படிக்க வைத்ததோடு, குடும்பத்தையும் காப்பாற்றி வந்தார். என் தந்தை இறந்து விட்டதால் எங்களையும், எங்கள் குடும்பத்தையும் இனி காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை. எனது படிப்பு, எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நான் சிஏ (CA) படிக்க விரும்புகிறேன். எங்களுக்கு யாராவது உதவி செய்தால் நிச்சயம் என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்" எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த தகவலறிந்த மடப்பட்டு எம்.ஆர்.கே பெட்ரோல் பங்க் மற்றும் சுபம் டி.வி.எஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் ரா.குமார் மாணவி அனிதாவைப் பாராட்டி இனிப்பு வழங்கினார். மேலும், மாணவியின் படிப்பு செலவிற்காக ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை வழங்கினார்.

இதையும் படிங்க: "படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது" - பிளஸ் 2 தேர்வில் அசத்திய நாங்குநேரி சின்னத்துரை!

ABOUT THE AUTHOR

...view details