நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் நூற்றாண்டை கடந்த யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயில் இன்று 125ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறது. இந்த மலை ரயிலை நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான வழியில் பல்வேறு அழகிய இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்து வரக்கூடிய அனுபவங்களை இந்த மலை ரயில் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கிறது.
மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று 125ஆம் ஆண்டை முன்னிட்டு குன்னூர் ரயில் நிலையத்தில் நுழைந்த மலை ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊட்டி மலை ரயில் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கோவை முதன்மை இரயில்வே அதிகாரி அனுராத் தாகூர் சேர்ந்து கேக்கை வெட்டி, பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.