சென்னை:இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை விசைப்படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அங்கு வந்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, மீனவர்களை கைது செய்து, படகு மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மீனவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து மாநில, மத்திய அரசுகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி மீனவர்களையும், அவர்கள் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் எண்ணிக்கை.... மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்!