தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்; 8.20 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்!

11th Public Exam: மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்காக அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் உரிய முன்னேற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

11 ம் வகுப்பு பொதுத்தேர்வு
11 ம் வகுப்பு பொதுத்தேர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 6:12 PM IST

Updated : Mar 4, 2024, 8:24 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு படிக்கு மாணவ மாணவிகளுக்கு இன்று (மார்ச் 4) முதல் 25ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7,534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் தேர்வெழுத உள்ளனர். மேலும், தனித்தேர்வர்களாக 5,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு 3,224 மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்துள்ளதாக கூறியுள்ளது.

சிறைவாசிகள் 187 பேரும் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை உறுப்பினர்கள் 3,200 பேரும், 1,134 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 46 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள், 240 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 265 பேரும், துறை அலுவலர்களாக 275 பேரும், அறைக் கண்காணிப்பாளர்கள் 3,325 பேரும், பறக்கும் படையில் 600 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மட்டுமின்றி புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்காக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும், தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், தேர்வறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன், இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 9498383076, 9498383075 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்வதற்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ்; குழந்தைத்தனமாகக் காரணங்களைக் கூறும் மத்திய அரசு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Last Updated : Mar 4, 2024, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details