சென்னை :சென்னை, திருவொற்றியூர் கிராம தெருவில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த அக் 25 மற்றும் நவ 4ம் தேதி ஆகிய இரு தேதிகளில் மாணவ, மாணவியருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதில், 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது அங்கு ஏற்பட்ட வாயு கசிவாக இருக்கலாம் என்ற நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியில் காற்று பரிசோதனை நடத்தினர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து பள்ளியில் எந்தவித வாயு கசிவும் ஏற்படவில்லை எனக் கூறினர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையிலும் எந்த விதமான வாயு கசிவும் இல்லை என தனது அறிக்கையை சமர்பித்தது.
ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு எதனால் பாதப்பு ஏற்பட்டது என தெரிவிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க :வாயு கசிவு விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 மணி நேர சோதனை நிறைவு.. பள்ளி திறப்பு எப்போது?
இதற்கிடையில் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளை தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குநர் நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும், பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை செய்யும் வாகனத்தை வைத்து தீவிர ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு பிறகே பள்ளி திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த நவ 4ம் தேதியன்று மாலை பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட காற்று பரிசோதனை வாகனம் சுமார் 100 மணி நேரம் தொடர்ந்து பள்ளியில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள காற்றை உறிஞ்சி அதில் என்ன மாதிரியான நச்சு உள்ளது என்பதை கண்டறியும் பணி நடைபெற்றது.
இப்பணி நவ 8 தேதியுடன் முடிவடைந்தது. இப்பணியின்அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பின்னரே பள்ளி திறக்கப்படும் என்ற சூழ்நிலை இருந்ததால் பள்ளி திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது. மேலும், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், முதற்கட்டமாக பள்ளி திறக்கப்பட்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, இன்று( நவ 13) 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3வது முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து மொபைல் ஏர் குவாலிட்டி மானிட்டரி ஸ்டேஷன் வாகனம் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக மருத்துவக் குழுவினர் பள்ளியில் முகாமிட்டுள்ளனர். மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பள்ளிக்கு அருகில் உள்ள இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்