நைரோபி:டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் துணை பிராந்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ருவாரகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்திய நேரப்படி 4 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென்னெட் மற்றும் மருமணி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வலுவான தொடக்கத்தை அமைத்தனர்.
சிக்சர் பவுண்டரி என துவம்சம் செய்த இந்த ஜோடி 6 ஓவருக்கு 103 ரன்களை குவித்து மிரட்டியது. இதில் பென்னெட் 50 (26) ரன்களுக்கும், மருமணி 62 (19) ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் இது வெறும் ட்ரைலர் தான் என்பதை போல் 4 வதாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, காம்பியா அணிக்கு கருணையே என்பதை காட்டாமல் காட்டடி அடிக்க ஆரம்பித்தார்.
இதனால் 10 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. ஆனால் அப்போது தெரியவில்லை. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே புதிய ஒரு சாதனை படைக்கப் போகின்றது என்று, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது.
இதுதான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக ஸ்கோராகும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ராசா 43 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 133 ரன்கள் குவித்தார். இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் 314-3 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.
பின்னர் 345 என்ற இமாலய இலக்கை துரத்திய கம்பியா அணியை 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது ஜிம்பாம்வே. இது சர்வதேச டி20 போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் மட்டுவா மற்றும் ரிச்சர்ட் ங்கரவா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வேஸ்லே மாதவேர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.