ஐதராபாத்: வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் ஏறத்தாழ 21 மாதங்களுக்கு பின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இடம் பிடித்துள்ளார். மேலும், ஐபிஎலில் பெங்களூரு அணியில் அசத்தி வரும் யாஷ் தயாள் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
மிடில் ஆர்டர் வரிசையில் நீண்ட நாட்களுக்கு பின் கே.எல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார். மற்றபடி எதிர்பார்த்த வீரர்கள் அனைவரும் இந்திய அணியில் இடம் பிடித்தனர். அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரண்டு வீரர்களும் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் இருவருக்கும் இடம் கிடைக்காமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அப்புறம் முகமது ஷமியை இந்திய அணியில் காண முடியவில்லை. அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்து முகமது ஷமி தற்போது உடற்தகுதியை எட்டிய போதும் அணியில் இடம் அளிக்காதது விவாதத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் துலிப் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயஸ் ஐயரும் இந்திய அணிக்கு தேர்வாகாதது ரசிகர்ளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முகமது ஷமி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதுக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. காயத்தில் இருந்து பூரண குணமடைந்து தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும் வேகப்பந்து வீச்சாளர் முகஷது ஷமி இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், துலிப் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி ரன் குவித்து வந்தாலும், பொதுவாக சிவப்பு பந்து பார்மட்டுகளில் அவர் சொதப்புவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆட்டங்களாக ஸ்ரேயாஸ் ஐயர் ரன் குவிக்க திணறி வரும் நிலையில், அவருக்கு கூடுதல் பயிற்சி தேவை என்பதன் காரணமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை எனத் தகவல் கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பிடிக்காமல் போனதுக்கு பிட்னஸ் பிரச்சினையும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அவர் விளையாடாமல் போனது கூட கிரிக்கெட் வாரியத்தின் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:கிரிக்கெட்டில் முதல் முறை: நியூசிலாந்து - ஆப்கான் டெஸ்ட் போட்டிக்கு வந்த சோதனை! - Afg vs NZ 2nd Day Called off