பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் 3 வெண்கலம் வென்று உள்ள இந்தியா பதக்கப் பட்டியலில் 54வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நாட்டின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீது உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் நீரஜ் சோப்ரா. அதேபோல் நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 6ஆம் தேதி ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கிறார். குரூப் ஏ தகுதிச் சுற்று மதியம் 1:50 மணிக்குத் தொடங்கும், குரூப் பி பிற்பகல் 3:20 மணிக்குத் தொடங்குகிறது. அதே நாளில் தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று முன்னேறினால், ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11:55 மணிக்குத் தொடங்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்று வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் அவரது அற்புதமான செயல்பாட்டிற்குப் பிறகு, நீரஜ் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டயமண்ட் லீக் பட்டத்தையும், 2023ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்று ஜொலித்தார்.
இப்போது அவர் ஈட்டி எறிதலில் நடப்பு உலக சாம்பியனாக பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். பாரீஸ் ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரும்புகின்றனர். அதேபோல் பாரீஸ் ஒலிம்பிக்கில் மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனாவும் பங்கேற்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவுடன் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் கிஷோர் குமார் ஜெனாவும் பங்கேற்க உள்ளார். 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ராவை தொடர்ந்து டீன் ஜெனா இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரேயொரு வெற்றி தான்.. வரலாறு படைக்கும் இந்தியா! இலங்கையுடன் இன்று மோதல்! - India vs Srilanka 2nd ODI