ப்ளூம்ஃபோன்டைன்: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கடந்த 19ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் இத்தொடர் 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி குரூப் ஏ-வில் உள்ளது.
கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசம் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், இன்று (ஜன.25) அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அசாதாரணமாக 301 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் சுமாரான தொடக்கத்தையே அளித்தாலும், அதன்பின் களம் இறங்கிய முஷீர் கான் மற்றும் கேப்டன் உதய் சஹாரன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இந்த பார்ட்னர்ஷிப் 156 ரன்கள் குவித்த பின்பே பிரிந்தது. உதய் சஹாரன் 84 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின் சதம் விளாசிய முஷீர் காண் 4 சிக்சர்கள், 9 ஃபோர்கள் உட்பட 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது.