பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில், 10 மீட்டர் ஏர் பிஸ்டலின் கலப்பு பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் துப்பாக்கிச் சுடுதல் வீரருக்கே உரித்தான கவச உடை, அதிக சத்தத்தை உணராமல் இருக்க இயர் பட்ஸ், வெளிச்சத்தால் கண் கூச்சம் ஏற்படாமல் இருக்க கண் மறைவு திரை, கூலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை அணிவித்து இருந்தனர்.
ஆனால் இது போன்ற எந்த வித உபகரணங்களும் இல்லாமல் வெறும் டீ சர்ட், பேண்ட், காதுகளில் இயர் பட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வந்து அனைவரும் வியக்கும் அளவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுச் சென்ற துருக்கி வீரர் தான் தற்போது சமூக வலைதளங்களின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளார்.
தலைவர் வேற ரகம் பார்த்து உஷாரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் துருக்கி வீரர் யூசுப் டிகேக்கிம் செயல் அமைந்து உள்ளது. துருக்கி நாட்டின் கொடி மற்றும் எழுத்துகள் பொறித்து இருந்த ஜெர்சி அணிந்து கொண்டு, ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து அசால்டாக இலக்கை பட்டு பட்டென சுட்டு வீழ்த்தும் அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.