கோயம்புத்தூர்:நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனால் கோவை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில், தமிழகத்திற்கு மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம், அனைத்து வசதிகளுடன் கோவையில் அமைக்கப்பட வேண்டும்"என வலியுறுத்தியிருந்தார். இதனை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல்அண்ட்டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன.