சென்னை : 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் நேற்று (செப்.22) நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று 2 தங்கம் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன்பு இந்திய ஆடவர் அணியினர் 2014ஆம் ஆண்டு மற்றும் கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு ஆகிய இரண்டு போட்டிகளில் மட்டுமே வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன. அதேபோல, மகளிர் அணியினர் கடந்த முறை 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் மட்டும் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன. அந்தவகையில் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியில் ஓபன் பிரிவு 10வது சுற்றின் முடிவில் இந்திய அணி 2.5 - 1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. பத்து சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது. இதனை அடுத்து, இறுதி சுற்றான 11வது சுற்றில் இந்தியா, ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்திய ஆடவர் அணி சார்பில் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி ஆகியோர் பங்கேற்றனர்.