ஐதராபாத்:இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ ஐதராபாத்தில் புதிதாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க உள்ளதாக தெலங்கான மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். உலகத் தரம் வாய்ந்த அளவிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடிய வகையிலும் புதிய ஸ்டேடியம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக பிசிசிஐயிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், விரைவில் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் திறன் மேம்ப்பாட்டு பல்கலைக்கழகம் அருகில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது. சரியாக ரங்காரெட்டி மாவட்டத்தில் கந்துகுர் மண்டல் அடுத்த பெகரிகன்சா கிராமத்தில் நிலம் கிரிக்கெட் ஸ்டேடியம் அமையம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள திறன் மேம்பாட்டு பல்கலைக்கழக பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைய அரசு நிலம் ஒதுக்கி உள்ளதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் தெரிவித்து இருந்தார். மேலும் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் புதிய விளையாட்டு கொள்கைகள் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
அந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், குரூப் 1 கேடர் அந்தஸ்திலான டிஎஸ்பி பதவி இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்றார். முன்னதாக முகமது சிராஜ் மற்றும் நிகத் ஜரீன் ஆகியோருக்கு டிஎஸ்பி பதவி வழங்குவது தொடர்பான மசோதா மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அந்த மனசு இருக்கே.. அதான் சார் கடவுள்..! உஷ்ணத்தால் வாடிய இந்திய வீரர்களுக்கு ஏசி! - Paris Olympics 2024