தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெளியேறியது பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா! - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

USA vs Ireland: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, வாஷ் அவுட் முறையில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்க அணி 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணி வீரர்கள்
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணி வீரர்கள் (Credits - ANI And AP)

By ANI

Published : Jun 15, 2024, 7:27 AM IST

புளோரிடா:கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 30வது லீக் போட்டியில் 'குருப் ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதவிருந்தன.

ஆனால், போட்டி நடைபெறும் புளோரிடாவில் கனமழை பெய்ததால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் புள்ளிகளின் அடிப்படையில் குரூப் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது அமெரிக்கா.

அமெரிக்கா தகுதி:டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்க அணி 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும். நடப்பு உலகக் கோப்பை தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் கனடா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அயர்லாந்துடன் மோதவிருந்தது அமெரிக்கா. ஆனால், மழையால் போட்டி ரத்தானதால் 5 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்தது.

வெளியேறியது பாகிஸ்தான்:நடப்பு உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா அணி 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றதால், பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறவுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் சோகத்தில் உள்ளனர்.

நடப்பு தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் இரண்டில் தோல்வி ஒன்றில் வெற்றி என 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி நாளை அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது, அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதனால் அதிகாரப்பூர்வமாக நடப்பு தொடரில் இருந்து வெளியேறுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் முதல் முறையாக குரூப் சுற்று போட்டியுடன் தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான். 2009ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான், அதிகமுறை டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் ஆடிய அணி என்ற சாதனையை தன்வசம் வைத்து இருந்தது. மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

சூப்பர் 8 சுற்று:நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஐசிசியின் டாப் 10 அணிகளில் ஒன்றான நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகிறது. அதேபோல் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க:ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சாய் சுதர்சன் தேர்வு.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஆண்டு விழாவில் சிறப்பு!

ABOUT THE AUTHOR

...view details